இந்த மாதம் 3-வது வாரத்தில் ஏற்காடு கோடை விழா

இந்த மாதம் 3-வது வாரத்தில் ஏற்காடு கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Update: 2023-05-10 20:23 GMT

இந்த மாதம் 3-வது வாரத்தில் ஏற்காடு கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

கோடை விழா

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஒவ்வொரு வருடம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த மாதம் 3-வது வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. விழாவை அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

மலர் கண்காட்சி

கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறை சார்பில் அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்பட உள்ளது.

மேலும் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, கோலப்போட்டி, படகு போட்டிகளும் நடக்கிறது. அதே போன்று செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், உதவி கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்