செல்போனில் அதிக நேரம் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்த சிறுமி-படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
நல்லம்பள்ளி:
செல்போனில் அதிக நேரம் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால், ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்த சிறுமி படுகாயம் அடைந்தார்.
17 வயது சிறுமி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு அம்மு (வயது 17) என்ற மகள் உள்ளார். அம்மு 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவர் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் அம்மு செல்போனில் அதிக நேரம் பேசி கொண்டிருந்தார். இதனை கவனித்த பெற்றோர் யாருடன் அதிக நேரம் பேசுகிறாய்? என்று கூறி, அம்முவை கண்டித்தனர். இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
மேம்பாலத்தில் இருந்து குதித்தார்
மேலும் வீட்டை விட்டு வெளியேறி அதியமான்கோட்டைக்கு வந்தார். அங்கு பைபாஸ் ரோட்டில் உள்ள புதிய ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் வலியால் துடித்து கொண்டிருந்த சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
செல்போனில் அதிக நேரம் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் சிறுமி மேம்பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.