கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஜவுளி வியாபாரி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஜவுளி வியாபாரி
வேப்பனப்பள்ளி முஸ்லிம்பூரை சேர்ந்தவர் பாரூக் (வயது 34). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் கடந்த 1½ ஆண்டுகளாக பாரூக் தனியாக வசித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட பாரூக் கடந்த 27-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சின்னமுத்தூரை சேர்ந்தவர் சூர்யா (21). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறியபோது சூர்யா தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் மன வேதனை அடைந்த சூர்யா கடந்த 26-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார். இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன அதிகாரி
ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்தவர் உமேஷ் (37). பெங்களூரு பொம்மசந்திராவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் செயல் இயக்குனராக பணியாற்றி வந்தார். கடன் பிரச்சினை காரணமாக மனமுடைந்த அவர் கடந்த 24-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுதொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி டிரைவர்
சிங்காரப்பேட்டை அருகே உள்ள குப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (29). லாரி டிரைவர். கடந்த 27-ந் தேதி இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த திருப்பதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.