பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இவர்களில் மூத்த மகள் ராகவி (15) மோளையானூரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாதையன் சூப் வாங்கி வந்து மகளுக்கு கொடுத்தார். ஆனால் அதனை குடிக்க ராகவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதை ஏன் குடிக்க வில்லை என்று மாதையன் கேட்டதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் ராகவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
விசாரணை
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொது கிணற்றின் அருகே ராகவியின் காலணிகள் கிடந்தன. இதனை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிணற்றில் குதித்து ராகவி தற்கொலை செய்து இருக்கலாம் என கருதி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி மாணவியின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.