விவசாயி விஷம் குடித்து தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே மனைவி கள்ளத்தொடர்பை கைவிடாததால் விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-02-04 18:45 GMT

காவேரிப்பட்டணம் அருகே மனைவி கள்ளத்தொடர்பை கைவிடாததால் விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மணிமாடிகொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51). விவசாயி. இவரது மனைவி பழனி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (40) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த வெங்கடேசன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழனி கணவர் வெங்கடேசனிடம் கோபித்து கொண்டு போத்தாபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர வெங்கடேசன் மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு கள்ளக்காதலன் முத்துசாமி இருப்பதை கண்டு வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

இதுகுறித்து கேட்டபோது பழனி, கள்ளக்காதலன் முத்துசாமி ஆகியோர் வெங்கடேசனை தாக்கி உள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெங்கடேசன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், முத்துசாமியை அழைத்து கண்டித்து உள்ளனர். ஆனாலும் இவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இதனால் விரக்தியில் மனமுடைந்து காணப்பட்ட வெங்கடேசன் கடந்த 1-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேசன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் வெங்கடேசனின் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தும், முத்துசாமியை கைது செய்ய வலியுறுத்தியும் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் வெங்கடேசனின் உடலை பெற்று கொண்டனர். இதனிடையே வேலூரில் பதுங்கி இருந்த முத்துசாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்