காதலி பேச மறுத்ததால் விரக்தி:பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-08-21 19:55 GMT

சேலம்

சேலத்தில் காதலி பேச மறுத்ததால் விரக்தி அடைந்த பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

சேலம் சின்னதிருப்பதி ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் ஆனந்த சுரேஷ் (வயது 21). இவர் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியில் வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் குடியிருந்து வந்தார்.

நேற்று காலை 6 மணியளவில் ஆனந்தசுரேஷ் படுத்திருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதனால் அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் தாயாரின் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதலி பேச மறுப்பு

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்தசுரேஷ் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் காதலியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் நள்ளிரவு 1.30 மணி வரை செல்போனில் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டே இருந்துள்ளார். அதன்பிறகு ஆனந்தசுரேஷ் விரக்தி அடைந்து தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்