பொங்கல் பரிசுடன் கரும்பை சேர்த்து வழங்க வேண்டும்- முத்தரசன்
பொங்கல் பரிசுடன் கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
பொங்கல் பரிசுடன் கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
கவர்னர் பரிசீலிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக கவர்னர், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அவர் கிடப்பில் போட்டுள்ளார். நீட் தேர்வு, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றால் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இவற்றை தடுக்க நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களை கவர்னர் விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும்.
முற்றுகை போராட்டம்
தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி நாளை(வியாழக்கிழமை) அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்த போராட்டத்தை கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தொடங்கி வைக்கிறார். இந்த போராட்டம் தொடர்பாக ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை போலீசாரே கிழித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இதில் தொடர்புடைய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு வழங்க வேண்டும்
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் கரும்பு, தேங்காய், மஞ்சள், இஞ்சி, நெய் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.