ஈரோடு மலைக்கிராமங்களில் தொடரும் அவலம்: பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்வதால் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ-மாணவிகள்
படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ-மாணவிகள்
ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் அதிக தூரம் நடந்து செல்லவேண்டியது இருப்பதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விடும் அவலம் தொடர்ந்து வருகிறது.
மலைக்கிராமங்கள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களான குன்றி, கொங்காடை, விளாங்கோம்பை ஆகிய பகுதிகளில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் நீண்ட தூரம் காட்டுப்பாதையில் நடந்து வர வேண்டியது உள்ளது.
இதனால் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி வருவதாகவும், இதனால் மலைக்கிராமங்களில் இடைநிற்றல் அதிகரித்து வருவதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன.
அதிர்ச்சி தகவல்
இதுகுறித்து மலைக்கிராமங்களில் மாணவ-மாணவிகளின் கல்வி நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட சுடர் தொண்டு அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பதாக தகவல்கள் வந்தன. அதைத்தொடர்ந்து சுடர் அமைப்பு மூலம் ஒரு புள்ளிவிவர சேகரிப்பு நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 1,000 மாணவ-மாணவிகள் பள்ளி இடைநிற்றலுக்கு ஆளாகி இருக்கும் அதிர்ச்சியான தகவல் கிடைத்து உள்ளது.
நடந்து செல்கிறார்கள்
மலைக்கிராமங்களை பொறுத்தவரை பள்ளி இடை நிற்றலுக்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாதது கண்டறியப்பட்டு இருக்கிறது. சத்தியமங்கலம் வட்டாரத்துக்கு உள்பட்ட குன்றி மலைப்பகுதியில் குஜ்ஜம்பாளையம் தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிக்கூடங்களில் படித்து வருபவர்களில் 102 மாணவ-மாணவிகள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து வருகிறார்கள்.
அந்தியூர் வட்டாரத்துக்கு உள்பட்ட கொங்காடை, தம்புரெட்டி மலைப்பகுதியை சேர்ந்த 110 மாணவ-மாணவிகள் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு நடந்து ஓசூர் உயர்நிலை பள்ளிக்கூடத்துக்கு செல்கிறார்கள். டி.என்.பாளையம் வட்டாரத்தில் விளாங்கோம்பை மலைக்கிராம மாணவ-மாணவிகளும் வினோபா நகர், கொங்கர்பாளையம் உயர்நிலை பள்ளிக்கூடங்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறார்கள்.
கால்வலியால் பாதிப்பு
இப்படி அடர்ந்த காட்டின் வழியாக காலையும், மாலையும் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் கால் வலி உள்ளிட்ட பாதிப்புகளால் இடைநிற்றல்கள் அதிகரிக்கின்றன. கொரோனா பெருந்தொற்றால் பள்ளிக்கூடங்கள் திறக்க நீண்ட இடைவெளி ஏற்பட்டது.
எனவே பெரும்பாலான மாணவ-மாணவிகள் ஆங்காங்கே கிடைக்கும் கூலிவேலைகளுக்கு சென்று விட்டனர். அதையும் மீறி பள்ளிக்கூடங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்லலாம் என்றால் அவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான தொலைவு அவர்களுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது.
கல்வி ஒளி
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் -2009 ல் தொடக்கக்கல்வியை ஒரு கிலோ மீட்டருக்குள் உறுதி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அப்படி இல்லை என்றால் அவர்கள் பள்ளிக்கு செல்ல போக்குவரத்து வசதி எற்படுத்தி தர வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மாணவ-மாணவிகளுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ.600 வழங்க வேண்டும். ஆனால் விளாங்கோம்பை கிராமத்தில் 8 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியது உள்ளது.
இதுபோல் குன்றி, கொங்காடை பகுதிகளிலும் ஆய்வு நடத்தி மலைப்பகுதி மக்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்ற அரசு, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.