கான்கிரீட் வீடுகள் கட்ட முடியாமல் அவதி

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கான்கிரீட் வீடுகள் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருவதால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதிவழங்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-01 18:45 GMT

கொள்ளிடம்:

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கான்கிரீட் வீடுகள் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருவதால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதிவழங்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுமான பொருட்கள்

கொள்ளிடம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளில் அரசின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் கட்டுமான பொருட்களான மணல், ஜல்லி கற்கள், இரும்பு கம்பிகள், செங்கல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடந்த 3 வருட காலங்களில் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தினால் அரசின் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொள்ளும் பயனாளிகள் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர். கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வேலையாட்களின் கூலியும் அதிகம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் தொகையை வைத்திருக்கின்ற பயனாளிகள் மட்டுமே எளிதில் முன்வந்து வீடு கட்டிக் கொண்டிருக்கின்றனர். மற்ற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் வீடு கட்டிக் கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

3 மடங்கு உயர்த்தி வழங்கினால்..

இதனால் பல ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டும் பணி தொய்வான நிலையில் இருந்து வருகிறது. பிரதம மந்திரியின் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலமும் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இத்திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொண்டிருக்கும் பயனாளிகள் கூறுகையில், தற்போதுள்ள கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தினால் வீட்டை கட்டி முடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

தற்போது அரசால் வழங்கப்பட்டு வரும் தொகையை 3 மடங்கு உயர்த்தி வழங்கினால் தான் தீர்மானிக்கப்பட்டுள்ள வீடுகளை முழுமையாக கட்டி முடிக்க முடியும். ஏழை எளிய வீடு கட்டும் பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் வீடு கட்டும் பயனாளிகளுக்கு கூடுதல் தொகை வழங்கி வீடு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்