குறைந்தழுத்த மின் வினியோகத்தால் அவதி: க.மேட்டுத்தெரு கிராம மக்கள் திடீர் மறியல்
குறைந்தழுத்த மின் வினியோகத்தால் அவதியடைந்த க.மேட்டுத்தெரு கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட க.மேட்டுத்தெரு கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குறைந்தழுத்த மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் மின்விசிறி, கிரைண்டர், வாஷிங்மெஷின் ஆகியவை இயங்கவில்லை என்றும் இரவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.