வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தம்பி கத்தியால் குத்திக்கொன்றது அம்பலம்

வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது தம்பியே அவரை கத்தியால் குத்திக்கொன்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது.

Update: 2022-06-05 20:13 GMT

மணப்பாறை:

கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணன்(வயது 31). டிரைவரான இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

இதில் லட்சுமிநாராணயனின் சகோதரரான ஜானகி ராமனிடம்(30) சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், லட்சுமிநாராயணனை கொலை செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது.

தம்பி கைது

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறியதாவது;-

குடும்பத்தில் வரவு, செலவு கணக்கு பார்ப்பது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் லட்சுமிநாராயணன் அறைக்கு தூங்கச்சென்று விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் காத்திருந்த ஜானகிராமன், தூங்கிக்கொண்டிருந்த லட்சுமிநாராயணன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது, தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஜானகிராமனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்