விடைத்தாள்கள் ஏற்றி சென்ற லாரி 'திடீர்' பழுது

அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வின் விடைத்தாள்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென பழுது ஏற்பட்டது.

Update: 2022-09-12 18:36 GMT

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-7பி பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை 3 பதவிகளுக்கான எழுத்துதேர்வு கடந்த 10-ந் தேதியும், குரூப் 8 பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலையில் இந்த தேர்வு கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் கருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று இரவு விடைத்தாள்கள் லாரியில் ஏற்றப்பட்டு பாதுகாப்புக்காக 'சீல்' வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திடீரென லாரியில் பழுது ஏற்பட்டது. அதனால் விடைத்தாள்களுடன் லாரி இன்று பகல் வரை திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

லாரிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பழுது சரி செய்யப்பட்ட பின்னர் அங்கிருந்து லாரி புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்