சென்னையில் நேற்று திடீர் மழை: பெங்களூரு திருப்பிவிடப்பட்ட 5 விமானங்கள்

சென்னையில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக 5 விமானங்கள் பெங்களூரு திருப்பிவிடப்பட்டன.

Update: 2022-08-22 02:05 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு 8 மணியில் இருந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

துபாயில் இருந்து இரவு 8.30 மணிக்கு சென்னை வந்த பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் இரவு 8.35 மணிக்கு லக்னோவில் இருந்து வந்த விமானமும், இரவு 8.50 மணிக்கு பக்ரைன் மற்றும் மும்பையில் இருந்து வந்த 2 விமானங்களும், 9.25 மணிக்கு ஹாங்காங்கில் இருந்து வந்த விமானமும் மழையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

அதேபோல் பெங்களூரு, மும்பை, கோவா ஆகிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலே வட்டமடித்துகொண்டு இருந்தன. மேலும் சென்னையில் இருந்து திருச்சி, அபுதாபி, டெல்லி, மும்பை, கோவை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு செல்ல வேண்டிய 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி முதல் 3 மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மழை ஓய்ந்து வானிலை சீரானதும் விமான சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும். பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட 5 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்