மதுரையை குளிர்வித்த திடீர் மழை-மக்கள் மகிழ்ச்சி
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மதுரையில் நேற்று இரவில் பலத்த மழை பெய்து நகரை குளிர்வித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மதுரையில் நேற்று இரவில் பலத்த மழை பெய்து நகரை குளிர்வித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
மதுரையில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றும் வெயில் சுட்டெரித்தது.. இதனால், மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர். இதற்கிடைேய நேற்று மாலை 6 மணி அளவில் மதுரை நகர் பகுதிகளில் கருமேகங்கள் ஒன்றிணைந்து மழைக்கான அறிகுறியை வெளிப்படுத்தியது. இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது. அதன்பின்னரும் சற்று நேரம் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
மாலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதுபோல், தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் மின்சாரமும் தடைபட்டது.
இந்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை பெரியார் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். அதோடு ஒரு மணி நேர மழைக்கே பெரியார் பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென்று இடி, மின்னல், காற்றுடன் மழை கொட்டியது.அதனால் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே சமயம் 2 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது. அதனால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மட்டுமல்லாது தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியது.அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
பேரையூர்
பேரையூர் தாலுகாவில் உள்ள எழுமலை, மேலதிருமாணிக்கம், ஆ. சுப்புலாபுரம், ஏ.கோட்டைப்பட்டி உசிலம்பட்டி தாலுகா மானூத்து, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த சின்னசாமி என்பவருடைய பசுமாடு மின்னல் தாக்கியதில் இறந்தது.
மேலும் பலத்த காற்றால் மேலதிருமாணிக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் வளாக மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. ஆ.சுப்புலாபுரத்தை சேர்ந்த பிச்சையம்மாள், ராமர், அமுதா, வாசிமலை, எ.கோட்டைப்பட்டியை சேர்ந்த பிச்சைமணி ஆகியோர் வீட்டின் ஒரு பகுதியும், பலத்த காற்றால் அவர்களுடைய வீட்டின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.