காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

Update: 2023-09-26 19:30 GMT

காரிமங்கலம்:-

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். அப்போது காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்ட அமைச்சர் அங்கு மருந்து சீட்டுகள் சரியாக வழங்கப்படுகிறதா? டாக்டர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகிறார்களா? என்பது குறித்து சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையத்தை பார்வையிட்டார். பின்னர் மருந்துகள் வழங்கும் இடத்தை ஆய்வு செய்தார். அப்போது ஆஸ்பத்திரிக்கு மருந்துகள் முறையாக வருகிறதா? மருந்து பற்றாக்குறை இருக்கிறதா?என்பது குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

புகார் பெட்டி

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை பார்வையிட்டார். அப்போது கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியை பார்வையிட்டார். அதில் ஏதேனும் புகார் கடிதங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிய புகார் பெட்டி அவர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் இருந்த சில கடிதங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆஸ்பத்திரி வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். சிகிச்சை பெற வருபவர்களை காத்திருக்க வைக்காமல் விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்