நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில்தா்மபுாி கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு
நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து கேட்டறிந்தார்.
கலெக்டர் திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்தில் உள்ள இருக்கை வாரியாக நிலுவை இனங்கள் குறித்தும், நீண்டநாளாக நிலுவையில் உள்ள நிலஅளவை மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்தும், பெறப்பட்ட மனுக்கள் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் தொடர்பாக தாசில்தார் மற்றும் அலுவலர்களுடன் கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
நிலுவையில் உள்ள மனுக்களின் விவரங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இ சேவை மையம்
தொடர்ந்து நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இ-சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வந்திருந்த விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகளையும், இ-சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டிடத்தில் செயல்படும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டு அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டார்.
ஆய்வின்போது தர்மபுரி உதவி கலெக்டர் கீதா ராணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, துணை தாசில்தார்கள சுதாகர், பாலகிருஷ்ணன், சண்முகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.