கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்
கன்னியாகுமரியில் நேற்று இரவு கடல் "திடீர்" என்று உள்வாங்கி காணப்பட்டது.
கன்னியாகுமரி,
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பவுர்ணமி தினமான நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் "திடீர்" என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்கக்கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.
அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.