பச்சிளம் குழந்தை திடீர் சாவு
ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் பச்சிளம் குழந்தை திடீரென இறந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்- சூர்யா தம்பதியினர். இவர்களுடைய ஆண் குழந்தை ஜெய் உதயன். இந்த குழந்தை பிறந்து 49 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்குளம்பட்டியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. இதில் சூர்யாவின் தாயார் வசந்தி, குழந்தைக்கு தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறுநாள் அதிகாலை 1 மணி அளவில் குழந்தையின் மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை இறந்ததற்கு தடுப்பூசி போடப்பட்டது காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் இதுகுறித்த முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.