மூர்த்திபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. இதனை புலியூர் பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் கவனித்து வருகிறார். இந்த செல்போன் கோபுரத்திற்கு மின்சாரம் இல்லாதபோது பயன்படுத்துவதற்காக தானாக இயங்கும் ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஜெனரேட்டரில் உள்ள டேங்கில் 50 லிட்டர் டீசல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ஜெனரேட்டர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைப்பார்த்த கோபால் அக்கம், பக்கத்தினரை அழைத்து தீயை அணைத்தும் பலனில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜெனரேட்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை ரசாயன பவுடர், ரசாயன நுரை மூலம் அணைத்து தீயை தடுத்தனர். இருப்பினும் ஜெனரேட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.