விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் தர்ணா போராட்டம்
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் தர்ணா போராட்டம்
ஆரணி
ஆரணியை அடுத்த தச்சூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் அரசின் சார்பாக குடியிருப்போர் அமைப்பில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி சம்பந்தப்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ளவர்களிடம் பெரும்பான்மை நிரூபித்து தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் நியமனம் செய்து கொள்ள ஏற்கனவே முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுவரை எந்தவித முடிவும் ஏற்படாத நிலையில் தி.மு.க. சார்பாக வெங்கடேசன் என்பவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக பூவரசன் என்பவரும் ஒரே பொறுப்புக்கு தேர்வு செய்ய வேண்டுமென கோரிக்கை முன் வைத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் ஆளும் கட்சிக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள் என்று இன்று மாலை மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், ரமேஷ், பொன்னுரங்கம், நகர செயலாளர் ரமேஷ் உள்பட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், சம்பந்தப்பட்டவர்களை அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் அங்கு ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தையில் வருகிற 29-ந் தேதி சம்பந்தப்பட்ட இடத்திலேயே பெரும்பான்மை நிரூபித்து பொறுப்பாளர்களை நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.