ஊட்டி
நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 மோப்ப நாய்கள் புலன் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 2 மோப்ப நாய்கள் குற்றம் நடைபெற்ற இடத்தில் சோதனை நடத்தவும், 2 மோப்ப நாய்கள் வெடிமருந்து சோதனை நடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜாக்கி என்ற மோப்ப நாய் காவல்துறையில் இணைந்தது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அந்த மோப்ப நாய், பட்பயர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதுவரை 96 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த அந்த மோப்ப நாய், இன்று காலையில் திடீரென உயிரிழந்தது. அதன் இறுதி சடங்கில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் சூப்பிரண்டு மோகன் நவாஸ் மற்றும் துணை சூப்பிரண்டுகள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.