நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி கடுமையாக உழைக்க வேண்டும் ; பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி வி.கே.சிங் வேண்டுகோள்

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி வி.கே.சிங் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2022-09-16 20:02 GMT

குழித்துறை, 

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி வி.கே.சிங் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய மந்திரி பேச்சு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் மார்த்தாண்டம் குறும்பேற்றி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது‌. நமது நாடு படிப்படியாக அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. பா.ஜனதா தலைமையிலான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

மீண்டும் மத்தியில் ஆட்சி

வருகிற 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிப்போம். உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு தனி இடமும், மரியாதையும் உள்ளது. இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவிலில் தரிசனம்

முன்னதாக மத்திய மந்திரி வி.கே.சிங் நேற்று காலையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு வந்தார். அவரை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கணக்கர் கண்ணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் பயபக்தியுடன் தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சன்னதி, திருவேங்கடம் விண்ணவரம் பெருமாள், இசைத்தூண்கள், நவக்கிரக மண்டபம், சுற்று பிரகாரம், ராமர் சன்னதி, 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

மத்திய மந்திரி வி.கே.சிங்குடன் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பொன் பாலகணபதி, கோவை மாவட்ட தலைவர் முருகானந்தம், விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரவீந்திரன், சுசீந்திரம் பேரூராட்சி கவுன்சிலர் வள்ளியம்மாள், முன்னாள் பொறுப்பாளர் குமார், வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா, டாக்டர் பிரசாத் ஆகியோர் உடன் வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்