உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடங்க மானியம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
பயிற்சி
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பாக பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
அவர் பேசியதாவது:-
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்ட மதிப்பீடு ரூ.10,000 கோடி வரை இலக்கினை அடைய 2020-21 முதல் 2024-25 வரை 5 ஆண்டு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வேளாண்மை வணிக துறையிடமிருந்து தற்போது தொழில் வணிகத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2022-23-ம் ஆண்டில் ரூ.140 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க தமிழக அரசு மத்திய அரசின் 60 சதவீத நிதிபங்களிப்பு, மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதற்கு தகுதியானவர்கள். கல்வித் தகுதி தேவையில்லை.
மானியம்
புதிய குறு நிறுவனங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யும் உணவு சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் இதன் மூலம் பயன்பெறலாம். திட்ட மதிப்பில் 35 சதவீத மானியமும், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வங்கிகள் மூலமாக 90 சதவிதமும், 10 சதவீதம் பயனாளியின் பங்கும் அடங்கும். இதற்கு ஆதார், ரேஷன் அட்டை, திட்ட மதிப்பு, வங்கி புத்தக நகல் மற்றும் பான்கார்டு வைத்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல். பால் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தியும் பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆனந்தன், திட்ட மேலாளர் கோமதி, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கங்காதரன், மகளிர் உதவி திட்ட அலுவலர் சுபாஷ், வேளாண்மை அலுவலர் (வணிகம்) சுரேஷ், மாவட்ட தொழில் மைய உதவிப்பொறியாளர் வசந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.