தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு மானியம்
தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை,
தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மானியம்
மத்திய மற்றும் மாநில அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் பல்வேறு திட்ட இனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் பரப்பு விரிவாக்க திட்ட இனத்தின் கீழ் வீரிய ஒட்டு காய்கறிகள் சாகுபடிக்கு (தக்காளி, மிளகாய் மற்றும் கத்தரி நாற்றுகள்) மா அடர் நடவு, கொய்யா அடர் நடவு, பலா சாகுபடி, நெல்லி சாகுபடி, பப்பாளி சாகுபடி மற்றும் முந்திரி சாகுபடிக்கு ஒட்டு கன்றுகள் அரசு தோட்டக்கலைப்பண்ணை, தேவகோட்டையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
1 எக்டேருக்கு மேல் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.2 லட்சம் மானியத்திலும், நீர் ஆதாரத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.75 ஆயிரம் மானியமும், வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.87 ஆயிரத்து 500 மானியமும், மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியமும் வழங்கப்பட உள்ளது.
இயற்கை விவசாயம்
நிலப்போர்வை அமைத்தல், மண்புழு உரப்படுக்கை, தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மைக்கும் மற்றும் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வாழைதார் உறைகளும் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், எந்திரமாக்கல் திட்ட இனத்தின் கீழ் பவர்டில்லர் மற்றும் பவர் ஸ்ப்ரேயர் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் கணினி பட்டா, அடங்கல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
முன்னுரிமை
தேவகோட்டை வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பஞ்சாயத்து கிராமங்களான உறுதிக்கோட்டை, என்.மணக்குடி, இளங்குடி, புளியால், வெட்டிவயல், ஆறாவயல், கிளியூர், கற்களத்தூர், புதுக்குறிச்சி ஆகிய பஞ்சாயத்து விவசாயிகளுக்கும், கண்ணங்குடி வட்டாரத்தில் உஞ்சனை, தத்தனி, சித்தானூர் ஆகிய பஞ்சாயத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த தகவலை தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்யா தெரிவித்தார்.