சேலத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்: மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் உழைக்க வேண்டும் மத்திய மந்திரி பேச்சு

சேலத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் உழைக்க வேண்டும் என்றார்.

Update: 2022-10-11 21:24 GMT

சேலம், 

ஆய்வு கூட்டம்

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 2 நாட்கள் பயணமாக மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை மத்திய இணை மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மநத்தம் கிராமத்தில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு தலைமை தாங்கினார். கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஜல் சக்தி அபியான், பாரதப் பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது.

முழுமையாக சென்றடைய வேண்டும்

கூட்டத்தில் மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு பேசியதாவது:-

ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் சேகரிப்பு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விவசாய நிலங்களில் வரப்பு அமைத்தல், மழை வளத்தை அதிகரிக்கும் வகையில் மரம் வளர்ப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைய அதிகாரிகள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். மேலும் அவர்கள் கிராமப்புறங்கள் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவி

இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை, உழவர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், குடிசை மாற்று வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு வழங்கினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை மத்திய மந்திரி பிஸ்வேஸ்வர் டிடு திறந்து வைத்து பார்வையிட்டார். கூட்டத்தில் எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங், மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், சேலம் விமான நிலைய இயக்குனர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்