தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தூத்துக்குடியிலேயே மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கும்: கலெக்டர்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தூத்துக்குடியிலேயே மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-08 18:45 GMT

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு தூத்துக்குடியிலேயே பயிற்சி கிடைக்கும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தொழில்நுட்ப மையம்

தமிழகத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.O தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதில் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.O தொழில்நுட்ப மையமும் ஒன்றாகும். இந்த மையம் திறந்து வைக்கப்பட்ட பிறகு, நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மையத்தை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன், உதவி செயற்பொறியாளர் கங்கா பரமேசுவரி, கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒப்பந்தம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தமிழ்நாடு அரசு டாடா குழுமத்துடன் இணைந்து மாநிலம் முழுவதும் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக ஒரு தொழில் வளாகம் தொழில் 4.O தொடங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 22 தொழில்பயிற்சி மையங்களில் தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார். இந்த தொழில்நுட்ப மையங்கள் மூலம் இதுவரை அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இல்லாத அளவுக்கு 5 பிரிவுகளில் நீண்ட கால பயிற்சியும், 23 பிரிவுகளில் குறுகிய கால பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பங்களான ரோபோட்டிக்ஸ், 3டி பிரிண்டிங், மின் வாகனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக டாடா குழுமம் மட்டுமல்லாமல் 21 குழுமங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் வளாகம் தொழில் 4.O தொழில்நுட்ப மையம் நிறுவப்பட உள்ளது. முதல்கட்டமாக கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டு, நிறைய உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொழில்நுட்ப மைய கட்டிடடம் ரூ.3.73 கோடி மதிப்பில் 10572.85 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இ.வி. எந்திரம், சி.என்.சி. எந்திரம், வி.எம்.சி.எந்திரம், லேசர் எந்திரம், பெயிண்ட் பாத் எந்திரம், ரோபோட்டிக்ஸ் எந்திரம், பிளம்பிங் எந்திரம், ஆட்டோ எம்.ஆர்.ஓ. மற்றும் பி.சி. எந்திரம் ஆகிய 8 வகையான எந்திரங்களுக்கான பணிமனை, அலுவலர் அறை, வி.டி.ஏ.டி. ஸ்டூடியோ, கூட்டரங்கம், சர்வர் அறை, வி.எஸ்.ஏ.டி. வகுப்பறை, ஐ.ஓ.டி. வகுப்பறை, பி.வி.ஏ. எந்திர வகுப்பறை, பி.டி.டி. வகுப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பயிற்சிகள்

தற்போதைய காலகட்டத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்த மாணவர்கள் வேலை தேடி பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது அங்குள்ள புதிய தொழில்நுட்பங்களை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இன்றைய தினம் முதல் பெரிய நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் எல்லாம் தொழில் 4.O மூலம் தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலேயே உள்ளது. இதேபோன்று நாகலாபுரம், வேப்பலோடை, திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. விரைவிலேயே அந்த தொழில்பயிற்சி நிலையங்களுக்கும் தொழில் 4.O விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். குறுகிய கால, நீண்ட கால பயிற்சிகளின் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தூத்துக்குடியிலேயே மாணவர்களுக்கு பயிற்சிகள் கிடைத்துவிடும் என்று கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்