ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்
பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்
மாநகரங்களில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து, ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் இளைஞர்களை நித்தமும் காண முடியும்.
ஒருபுறம் பஸ் பற்றாக்குறையால் இப்படி அவர்கள் செல்வதாக கூறினாலும், பெரும்பாலான பஸ்களில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும், படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வழக்கத்தைதான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் சில மாணவர்கள் பஸ் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு காலை தரையில் தேய்த்து 'ஸ்கேட்டிங்' செய்யும் விபரீத விளையாட்டையும் மேற்கொள்கின்றனர்.
சாகச பயணம்
படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால்தான், அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? கதாநாயகன் என்ற மிதப்பில் இவ்வாறு சாகசப்பயணம் செய்கின்றனர்.
அவர்களின் அத்துமீறல்கள் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும்கூட அச்சப்படச் செய்கின்றன.
அதுமட்டுமா? குழுவாக சேர்ந்து பாடுவது, தாளம் போடுவது, பஸ் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போடுவது போன்ற பொறுப்பற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
இதில் அந்த பஸ்சை இயக்கும் டிரைவர், கண்டக்டரின் நிலைதான் பரிதாபம். 'இவர்களிடத்தில் வாக்கப்பட்டு நாங்கள் படும் கஷ்டத்தை என்ன சொல்வது?' என்பதே அவர்களின் வேதனையாக வெளிப்படுகிறது.
பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும், அவர்களின் போக்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? அவர்களின் இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்பன பற்றி ஆசிரியர்கள், கல்வியாளர், பஸ் டிரைவரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
புரிதல் வேண்டும்
விருதுநகர் கல்வியாளர் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம்:-
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்யும் நடைமுறை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. போதிய பஸ்கள் இல்லாத நிலையில் இந்த நடைமுறை அதிகரிப்பதாக கூறப்பட்டாலும் மாணவர்கள் வாழ்க்கையில் உயர்நிலைக்கு செல்ல வேண்டிய நிலையில் அவர்களுக்கு படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் உயர் நிலையை எட்ட முடியாது என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த கூடிய நடவடிக்கை அவசியமாகும்.
மாணவர்களின் குடும்பசூழல், பெற்றோரின் எதிர்பார்ப்பு ஆகியவை குறித்த புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தினால் உறுதியாக அவர்கள் பஸ் படிக்கட்டு பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள், படிக்கட்டு பயணம் உயிர் பலியை ஏற்படுத்தக் கூடியது என்ற விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்,
கேள்விக்குறி
நோபிள் கல்லூரி பேராசிரியை ராமகிருஷ்ணவேணி:-
நடைமுறையில் பள்ளி,கல்லூரி நேரங்களில் போதிய பஸ் வசதி இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் போதிய பஸ் வசதி செய்யப்படாததால் கிராமப்புற மாணவர்களும், மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி, பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையில் மிகவும் அவதிக்குள்ளாகி மாணவர்கள் தவிர்க்க முடியாமல் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மேலும் தனியார் பஸ்களின் வேகம் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் நிலை உள்ளது.
எனவே சாலைகளில் தேவையான அளவிற்கு வேகத்தடை ஏற்படுத்த வேண்டும். மேலும் பஸ் ஊழியர்களும் மாணவர்களை படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. மாணவர்களும் விபத்துகளை தவிர்க்க பஸ் பயணத்தின் போது போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பளித்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும்.
கண்காணிப்பு பணி
வத்திராயிருப்பை சேர்ந்த இந்து பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை ராதா:-
வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்கள் படியில் நின்று பயணம் செய்யும் நிலை என்பது தொடர்கதையாக உள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாதவாறு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மாணவர்களை பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கும்.
நொடி பொழுதில் விபத்து
காரியாபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பஞ்சவர்ணம்:-
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் விவசாயம் செய்து தங்களது குழந்தைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் பஸ்சில் அனுப்பி வருகின்றனர். பஸ்சில் பயணம் செல்லும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தான் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
இதனால் அடிக்கடி நொடி பொழுதில் விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்து வருகிறது. படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால் கடுமையான நடவடிக்கை வேண்டும். அப்பொழுது தான் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்ய மாட்டார்கள். கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தால்தான் மாணவர்களும் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்ப்பார்கள். பள்ளி நேரத்தின்போது போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு குழந்தைகள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் பதட்டத்துடன் தான் இருந்து வருகின்றனர். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
குறைந்த கட்டணம்
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பஸ் டிரைவர் ராமராஜ்:-
தற்போது மாணவர்கள் படியில் பயணம் செய்வது குறைந்துள்ளது. நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியாத விழாக்காலங்களிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் படியில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
மேலும் கண்டக்டரும், டிரைவரும் படியில் தொங்கும் மாணவர்களை கண்டிக்க இயலாது. அவர்களிடம் வேண்டி கேட்டுக்கொண்டு மேலே வர கூறுகிறோம். மேலும் பஸ்சையும் கவனமாக ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. தற்போது மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் கொடுப்பதாலும், மகளிருக்கு இலவசம் கொடுப்பதாலும் அரசு பஸ்சை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. படியில் பயணத்தை தவிர்க்க அரசு பள்ளி கல்லூரி வாகனங்களில் மாணவர்களை குறைந்த கட்டணத்தில் ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.