மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்

குடவாசலில் உள்ள எம்.ஜி.ஆர். கலை-அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டிட வசதி கோரி மாணவ-மாணவிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-09-29 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில், அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு போதிய கட்டிடவசதி இல்லாததால் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கூடுதல் கட்டிடங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க நன்னிலம் சட்டமன்ற ெதாகுதிக்கு உட்பட்ட இந்த கல்லூரியை திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்லூர் பகுதிக்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

காத்திருப்பு போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நன்னிலம் தொகுதியிலேயே குறிப்பாக குடவாசல் பகுதியில் கல்லூரிக்கான கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் குடவாசல் பஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாணவர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மனோஜ், ஒன்றிய செயலாளர் சுகதேவ், ஒன்றிய துணைத் தலைவர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அ.தி.மு.க. ஆதரவு

இதனை அறிந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாப்பா சுப்பிரமணியன், நகர செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் மாணவ- மாணவிகளை சந்தித்து போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர் கல்லூரி மாணவ-மாணவிகள் மாைல கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக குடவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்