அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உடனடியாக பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உடனடியாக பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் தவிர வேறு ஏதும் வழங்கப்படவில்லை என்றும், சில பள்ளிகளில் பாடப் புத்தகங்கள்கூட தரப்படவில்லையென்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர உபகரணங்களை மாணவ, மாணவியருக்கு உடனுக்குடன் அளிக்காதது படிப்பில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தை குறைக்கும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் காலணி இல்லாமல் நடப்பது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலணி உட்பட இதர வகை பொருட்களை உடனடியாக அளிக்கப்படாதது என்பது சமூக அநீதியாகும்.
எனவே, முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உடனடியாக பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப் பை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.