கனவுகளை நிஜமாக்க மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

“அப்துல்கலாம் கூறியதுபோல், மாணவ சமுதாயம் பெரிய கனவுகளை காணவும், கனவுகளை நனவாக்க கடுமையாக உழைக்கவும் வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி.

Update: 2022-10-15 17:54 GMT

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 91-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டி ராஜ்பவன் வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, அப்துல் கலாமின் எண்ணற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். அப்போது, "அப்துல்கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி, தொலைநோக்கு அரசியல்வாதி. எளிமை மற்றும் அறிவின் சுருக்கம். அவர் இளைஞர்களை மிகவும் நம்பினார். தனது செயல்கள் மற்றும் வார்த்தைகளால் அவர்களை ஊக்கப்படுத்தினார். தன்னம்பிக்கை மற்றும் வலுவான தேசத்தை உருவாக்குவதில் இந்திய இளைஞர்களுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசும்போது, "அப்துல்கலாம் கூறியதுபோல், மாணவ சமுதாயம் பெரிய கனவுகளை காணவும், கனவுகளை நனவாக்க கடுமையாக உழைக்கவும் வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். 'உங்கள் கடந்த காலத்தை வருத்தமில்லாமல் ஏற்றுக்கொள்ளுங்கள், நிகழ்காலத்தை நம்பிக்கையுடன் கையாளுங்கள், உங்கள் எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள்' என்ற அப்துல்கலாமின் பொன்மொழிகளையும் கவர்னர் ஆர்.என்.ரவி அப்போது நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்தராவ் வி பாட்டில் உள்பட அதிகாரிகள், ராஜ்பவன் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்