மாணவர்கள் இடைநிற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்

மாணவர்கள் இடைநிற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Update: 2022-08-24 19:33 GMT

மாணவர்கள் இடைநிற்றல் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ஆய்வு கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளின் செயல்பாடு குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவர்களுக்கு சேர வேண்டிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்ட பொருட்கள் எந்த அளவுக்கு வந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பொருட்கள் வராதபட்சத்தில் உடனடியாக பெறக்கூடிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். விலையில்லா சைக்கிள்களை மக்கள் பிரதிநிதிகளை வைத்து வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 70 லட்சத்தை கடந்துள்ளது.

800 டாக்டர்கள்

தமிழகத்தை இடைநிற்றல் இல்லா மாநிலமாக உருவாக்க வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க 800 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், தமிழரசி ரவிக்குமார், காதர்பாட்சா முத்துராமலிங்கம், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கூறும்போது, அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் மாணவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒவ்வொரு துறை மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய முறையில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

பயிற்சி வகுப்பு

மேலும் ராஜபாளையம் அருகே உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு மேம்பாட்டிற்கான மாநில அளவிலான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் 38 மாவட்டங்களில் இருந்து 202 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் 3-வது நாள் பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய திட்டங்கள் கொண்டு வருவதில் கல்வித்துறைக்கும், சுகாதார துறைக்கும் அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. தற்போது கல்வித்துறையில் என்ன மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டங்கள் குறித்து புரிந்த பின்னர் நம்மை அனைவரும் பாராட்டுவர்.

இவ்வாறு அவர் கூறினர்.

இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்