"உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர நடவடிக்கை" - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 1,896 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-07 15:51 GMT

சென்னை,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில், 100 நாட்களைக் கடந்து இந்த போரானது இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு மருத்துவம் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து சென்ற மாணவர்கள், மத்திய அரசின் அவசர கால நடவடிக்கை மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

உக்ரைனில் தற்போது வரை போர் முடிவுக்கு வராததால், அங்கிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை மீண்டும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலேயே தங்களது மருத்துவ படிப்பை தொடர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தமிழகம் திரும்பிய 1,896 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்தியாவிலேயே படிப்பைத் தொடர மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தினைக் கொடுத்து, சாதகமான முடிகளைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்