கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்த மாணவ-மாணவிகள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு வந்தனர். ஆசிரியர்கள் சாதியை சொல்லி திட்டுவதாக புகார் மனு கொடுத்தனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு வந்தனர். ஆசிரியர்கள் சாதியை சொல்லி திட்டுவதாக புகார் மனு கொடுத்தனர்.
மாணவ-மாணவிகள்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மனு கொடுப்பதற்காக திரண்டு வந்தனர்.
வாக்குவாதம்
சாதியை சொல்லி அவதூறாக பேசி அடிக்கின்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்க வந்துள்ளதாக கூறி மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றனர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் துறை ஆய்வு கூட்டம் நடந்ததால் அனைவரும் உள்ளே செல்லக்கூடாது. ஒரு சிலர் மட்டும் உள்ளே செல்ல வேண்டும் என்று போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், மாணவிகளை அழைத்து வந்த பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யாவிடம் மனு கொடுத்தனர்.
புகார் மனு
அதில் "நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். எங்களுடைய பள்ளி தலைமை ஆசிரியர் தகாத வார்த்தையால் பேசி தலையில் அடிக்கிறார். ஏன் அடிக்கிறீர்கள்? என்று கேட்டால் சாதியை சொல்லி திட்டுகிறார்.
மேலும் பெண் குழந்தைகள் பூ வைத்தால் அவமானமாக பேசுகிறார். இதனால் மாணவ- மாணவிகள் மன வேதனையில் உள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப்பதிவு மட்டும் செய்துள்ளனர். எங்களை அவதூறாக பேசும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் சுகாதார வளாகம், மின்விசிறி இல்லை. இதை சரி செய்து தர வேண்டும்" என்று கூறியுள்ளனர்.