ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-08 18:45 GMT

61 விடுதிகள்

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஒரு முதுகலை பட்டதாரி கல்லூரி மாணவர் விடுதியும், 3 கல்லூரி மாணவர் விடுதியும், 4 கல்லூரி மாணவிகள் விடுதியும், 2 தொழிற்பயிற்சி மாணவர் விடுதியும், ஒரு தொழிற்பயிற்சி மாணவிகள் விடுதியும், 31 பள்ளி மாணவர் விடுதியும், 19 மாணவிகள் விடுதியும் என மொத்தம் 61 விடுதிகள் உள்ளன.

இந்த விடுதிகளில் இந்து ஆதிதிராவிடர் வகுப்பினை சேர்ந்த மாணவ- மாணவிகள் 85 சதவீதம் பேரும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர்கள் 10 சதவீதம் பேரும், இதர வகுப்பினர் 5 சதவீதம் பேரும் சேர்ந்து பயனடையலாம்.

இலங்கை தமிழர்களின் குழந்தை

இதற்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியில் இருந்து மாணவர் குடியிருப்பு 5 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது. மேலும் ஒரு விடுதிக்கு தலா 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளை விடுதியில் சேர்த்திடலாம்.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி 9 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 4 இணை இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக வினா வங்கி நூல்கள் மற்றும் சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் தரமான உணவு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் வழங்கப்படுகிறது. பாய், போர்வை, தட்டு, டம்ளர் ஆகியவையும் வழங்கப்படும்.

30-ந் தேதி கடைசிநாள்

பள்ளி விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை விடுதி மேலாண்மை செயலிமூலம் http://tnadw-hms.in/ என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது தொடர்புடைய விடுதி காப்பாளர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்