மாணவ-மாணவிகள் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்-உதவி கலெக்டர் அறிவுரை

Update: 2023-01-29 18:45 GMT

கிருஷ்ணகிரி:

மாணவ-மாணவிகள் தங்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் அறிவுறுத்தினார்.

தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். இதில், 'போட்டி தேர்வுகள் வேலைவாய்ப்பு' என்கிற தலைப்பில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரம் பேசினார். 'தன்னம்பிக்கையே வாழ்க்கை வெற்றிக்கு அடிப்படை' என்கிற தலைப்பில் தனிமனித மேம்பாட்டு திறன் பயிற்சியாளர் நிமலன் மரகதவேல் பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஷ்குமார் பேசியதாவது:-

போட்டி தேர்வு

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள், தற்போதே போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை சேகரித்து, படிக்க வேண்டும். குறிப்பாக நாள்தோறும் நாளிதழ்கள், அறிவுசார்ந்த புத்தகங்கள் உள்ளிட்டவை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

தற்போது, அரசு சார்பில் போட்டி தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, இலவச பயிற்சிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அளிக்கப்படுகிறது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் திறமையை உணர்ந்து தனித்திறனை வளர்த்து கொண்டால், வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்