மின்கம்பத்தில் தலை மோதி கல்லூரி மாணவர் பலி
ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர், மின்கம்பத்தில் தலை மோதி பலியானார்.
கல்லூரி மாணவர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேசவாடி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவருடைய மகன் கிருஷ்ணா (வயது 17). இவர், சென்னை அம்பத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பாரா மெடிக்கல் படித்து வந்தார். தினமும் அரக்கோணத்தில் இருந்து அம்பத்தூருக்கு ரெயிலில் கல்லூரிக்கு வந்து சென்றார். வழக்கம்போல் நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் வந்து கொண்டிருந்தார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணா, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
மின்கம்பத்தில் மோதி பலி
இந்து கல்லூரி - ஆவடி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்றபோது தண்டவாளம் அருகில் உள்ள மின் கம்பத்தில் கிருஷ்ணாவின் தலை மோதியது. இதில் நிலைதடுமாறி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவர் கிருஷ்ணா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் லலிதா (65). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பட்டாபிராம் ரெயில் நிலையம் வந்தார். அப்போது தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.