சரக்கு ஆட்டோ மோதி மாணவர் பலி
வெண்ணந்தூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி கல்லூரி மாணவர் பலியானார்.;
வெண்ணந்தூர்
கல்லூரி மாணவர்
வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் சவுந்தர்ராஜன் (வயது 19). இவர் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் சவுந்தர்ராஜன் தாளம்பள்ளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் அத்தனூர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அத்தனூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தர்ராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இது குறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இறந்தவரின் தந்தை ராஜா வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.