மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
நல்லம்பள்ளி அருகே கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானான். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கதிர்வேல் (வயது 15). இவன் பள்ளி ஒன்றில் 10- ம் வகுப்பு படித்து முடித்து பிளஸ்-1 படிப்பில் சேர திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இவன் சிவாடி- தர்மபுரி மின்சார ரெயில் தண்டவாள பகுதியில் விளையாட சென்றுள்ளான்.
அப்போது தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ள மின்கம்பத்தில் திடீரென ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மாணவனை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தான். உயிருக்கு போராடிய அவனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
சாவு
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவன் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி மற்றும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.