ஏரியில் மூழ்கி மாணவன் பலி
கண்டாச்சிபுரம் அருகே ஏரியில் மூழ்கி மாணவன் பலி
திருக்கோவிலூர்
கண்டாச்சிபுரம் அருகே உள்ள செங்கமேடு கிராமமக்கள் ஒன்று கூடி மடவிளாகம் ஏரியை ஒட்டியவாறு உள்ள வீரன் கோவிலில் பொங்கல் வைத்து விழா கொண்டாடினர். இந்த விழாவுக்கு வந்த செங்கமேடு கிராமம் தண்டபாணி மகன் குணா(வயது 10) இவனது நண்பன் அதே பகுதியை சோ்ந்த நடராஜன் மகன் ஜீவா(10) ஆகிய இருவரும் மடவிளாகம் ஏரியில் குளிக்க சென்றபோது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று நீரில் மூழ்கிய 2 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக விழுப்பும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குணா பரிதாபமாக இறந்தான். ஜீவாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பலியான மாணவன் குணா அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவிழாவுக்கு வந்த இடத்தில் ஏரியில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் செங்கமேடு கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.