ஆபத்தான விடுதியில் தூக்கமின்றி தவிக்கும் மாணவர்கள்
ஆபத்தான விடுதியில் தூக்கமின்றி தவிக்கும் மாணவர்கள்
திருப்பூர்
திருப்பூர் காலேஜ் ரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி சேதமடைந்து மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது.
அச்சத்தில் மாணவர்கள்
திருப்பூர் காேலஜ் ரோடு 6-வது குறுக்கு வீதியில் கல்லூரி மாணவர்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி உள்ளது. இங்கு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இந்த விடுதி கட்டப்பட்டு 30 வருடங்கள் ஆகி விட்டதால் கட்டிடம் சேதமடைந்து வலுவிழந்து காணப்படுகிறது. குறிப்பாக விடுதியின் முதல் தளத்தில் உள்ள பல அறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே மேற்கூரைகள் இடிந்து காணப்படுகிறது. இதிலிருந்து தினமும் சிமெண்டு காரைகள் கீழே விழுந்தவண்ணம் இருப்பதால் இங்கு ஓய்வெடுக்கும் மாணவர்கள் எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தூக்கமின்றி தவிக்கின்றனர்
இதேபோல், சமையல் கூடத்தின் மேற்கூரையும் பெரிய அளவில் இடிந்து காணப்படுவதால் சமையல் செய்பவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
நோய் பரவும் அபாயம்
இதேபோன்று இங்கு குளியல் அறை மற்றும் கழிவறை என மொத்தம் 20 அறைகள் உள்ளன. இதில் சேதமடைந்த அறைகள் மற்றும் குளியல் அறைகளை தவிர்த்து தற்போது 10 கழிவறை மட்டுமே உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. மேலும் இவை சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதேபோன்று விடுதியை சுற்றிலும் புதர்மண்டி காணப்படுவதால் கொசுத்ெதால்லையாலும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஜன்னல்கள் பல சேதமடைந்து காணப்படுவதால் அதிகமாக படையெடுக்கும் கொசுக்களாலும் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் சுற்றுச்சுவரும் கட்டப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் சிலர் விடுதி வளாகத்தை மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர்.
சிற்றுண்டி கிடைக்குமா?
இதேபோன்று விடுதியில் வழங்கப்படும் உணவுகள் சில நேரங்களில் தரமின்றி இருப்பதாகவும், ஒரே ஒரு மாதம் மட்டுமே சிற்றுண்டி வழங்கப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். எனவே விடுதியில் உள்ள சேதத்தையும், சுற்றுச்சுவர் அமைக்கவும், கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் கூறும் போது, விடுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். சீரமைப்பு பணிக்கான திட்ட மதிப்பீடும் தயாராகி விட்டது என தெரிவித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.