பரிசல் கட்டணம் வாபஸ் விவகாரம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2023-06-30 19:30 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே பரிசல் கட்டணம் உயர்வு தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரிசல் கட்டணம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராமமக்கள் சேலம் மாவட்டம் கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் பரிசல் மூலம் சென்று வருகின்றனர். இவர்கள் நாகமரை-பண்ணவாடி பரிசல் துறை, ஒட்டனூர்- கோட்டையூர் பரிசல் துறையில் இருந்து சென்று வந்தனர். கடந்த மாதம் பரிசல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாகமரை பகுதி பொதுமக்கள், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு அதிகாரிகள் முன்னிலையில், பரிசல் ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

2-ம் கட்ட பேச்சுவாா்த்தை

இந்தநிலையில் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் பழனிசாமி (ஏரியூர்), புவனேஸ்வரி (கொளத்தூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ஜெகதீசன், ரேணுகா, பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் மற்றும் பொதுமக்கள், பரிசல் ஒப்பந்ததாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரியூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட பரிசல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். டீசல் விலை உயர்வு உள்ளிட்ட நடைமுறை செலவினங்கள் அதிகரித்துள்ளததால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் நடத்திய 2-ம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

உள்ளிருப்பு போராட்டம்

இதையடுத்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பரிசல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து முடிவு எட்டப்படும் வரை பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்