பெற்றோர் தர்ணா போராட்டம்

இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-02 16:57 GMT

இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 395 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை கவிதா உள்ளிட்ட 19 ஆசிரியர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் தலைமையில் பெற்றோர் பள்ளி முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளி மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். திறக்கப்படாமல் உள்ள கூடுதல் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பள்ளியில் பாம்புகள் அதிக அளவில் இருப்பதால் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் பணிபுரியும் 7 ஆசிரியர்கள் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் உள்ளதால் மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

மேலும் சுகாதாரமின்றி கிடக்கும் சத்துணவு மையத்தை சீரமைக்க வேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர். அரசு பள்ளியில் பெற்றோர்களின் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் நடந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை நேற்று பள்ளிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்