காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அறப்போராட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகரன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பேசியதாவது:- மத்திய அரசு வேண்டுமென்று பழி வாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை மூலம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது போன்ற செயல்களின் மூலம் காங்கிரஸ் கட்சியை அடக்கி விட முடியாது. காங்கிரஸ் சார்பில் ஆகஸ்டு மாதம் சிவகங்கை மாவட்டத்தில் பாதயாத்திரை நடத்த உள்ளோம் என்று பேசினார்.
இதில் மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யா, மாவட்ட தலைவர் இமய மடோனா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ், விஜயகுமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மோகன்ராஜ், வட்டார தலைவர்கள் வேலாயுதம், சோனைமுத்து, மதியழகன், மற்றும் நிர்வாகிகள் சோனை, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாண்டி மெய்யப்பன் நன்றி கூறினார்.