மயானத்துக்கு செல்லும் வழித்தட பிரச்சினை:இறந்தவரது உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்

மயானத்துக்கு செல்லும் வழித்தட பிரச்சினையால் இறந்தவரது உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

Update: 2023-09-24 20:10 GMT

தாரமங்கலம்

மயானத்துக்கு செல்லும் வழித்தட பிரச்சினையால் இறந்தவரது உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

வழித்தட பிரச்சினை

தாரமங்கலம் அருகே உப்பாரப்பட்டியில் யாராவது இறந்தால் நீண்டகாலமாக குறிப்பிட்ட வழித்தடத்தில் அவரது உடலை அடக்கம் செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மயானத்துக்கு செல்லும் பாதைக்கு தனிநபர் கம்பி வேலி அமைத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லையாம்.

இதற்கிடையே நேற்று பழனி (வயது 65) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்ற போது வழித்தட பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. உடனே கிராம மக்கள் இறந்தவரது உடலை அங்கேயே வைத்து போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன், மானத்தாள் கிராம நிர்வாக அலுவலர் திரவிய கண்ணன் மற்றும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களில் வழித்தட பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் இறந்தவரது உடலை எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்