டாக்டர் மீதான தாக்குதல் விவகாரம்; அடிப்படை கட்டமைப்பை அரசு சரிசெய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பை அரசு சரிசெய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பை அரசு சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-
"டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒரு தனிப்பட்ட சம்பவமாக நான் பார்க்கவில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு ஏழை நோயாளிகள் நம்பிக்கையோடு வருகிறார்கள். மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பை அரசு சரிசெய்ய வேண்டும். டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே சுமூகமான உறவு இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் வைக்கலாம். நோயாளிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை சரிசெய்யலாம். எந்த டாக்டரும் பாரபட்சத்தோடு சிகிச்சை அளிப்பது இல்லை. ஆனால் சில நேரங்களில் பிரச்சினைகள் வரும்போது, அது தாக்குதல் அளவிற்கு போகக்கூடாது."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.