விவசாயிகள் கையெழுத்து இயக்க போராட்டம்

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கையெழுத்து இயக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-24 18:44 GMT

மோகனூர்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

மோகனூரை அடுத்த வளையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சிப்காட் சம்பந்தமான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.

கையெழுத்து இயக்கம்

இந்தநிலையில் நேற்று மோகனூர் வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதை தவிர்க்க வலியுறுத்தி 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும், கையெழுத்து இயக்க போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்திற்கு விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். கொ.ம.தே.கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், சிப்காட் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க. செயலாளர் மாதேஸ்வரன் கலந்துகொண்டு, கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். கொ.ம.தே.க. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் ராஜா, மாவட்ட அமைப்பாளர் தமிழரசு, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி பிரபாகரன் மற்றும் சிப்காட் எதிர்ப்பு குழு நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்