குல கல்வி திட்டத்திற்கு எதிராகநாடு தழுவிய அளவில் போராட்டம்தி.க. தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

Update: 2023-08-28 19:45 GMT

கிருஷ்ணகிரி 

குல கல்வி திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணகிரியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

முப்பெரும் விழா

பெரியார் சுய மரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் பெரியார் மய்யம் திறப்பு விழா, பெரியார் சிலை திறப்பு விழா, அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அறிவரசன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் மய்யத்தை திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பெரியார் சிலையை திறந்து வைத்தார். உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி அம்பேத்கர் நூலகத்தை திறந்து வைத்தார். கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, கி.வீரமணி படிப்பகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கி.வீரமணி பேசியதாவது:-

வெற்றிடம் அல்ல கற்றிடம்

திராவிடர் கழகமும், தி.மு.க.வும், இரட்டை குழல் துப்பாக்கி என்று அண்ணா கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தி.க.வும், தி.மு.க.வும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறினார். இன்றைய தினம் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நாள். அவருக்கு வாழ்த்துக்களை நானும், என்னுடன் இருந்த அமைச்சர்களும் கூறினோம்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி போன்ற மூத்த தலைவர்கள் மறைவுக்கு பிறகு, இனி தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக கூறினார்கள். ஆனால் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை. மாறாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிற்கே கற்றிடமாக தமிழகத்தை மாற்றி உள்ளார். மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டம் மூலம் 34 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகிறார்கள்.

குல கல்வி திட்டம்

இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி. கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தருகிற ஆட்சி. மத்திய அரசு மூலம் குல கல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறது. அதன் மூலம் தந்தையின் தொழிலையே மகனும் பின்பற்ற ஊக்குவிக்கிறது. இதனால் ஏழை மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள், கலெக்டர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகலாம் என்ற கனவை தகர்க்கிறார்கள்.

பா.ஜ.க. இந்தியாவை விட்டு விரட்டப்பட வேண்டிய கட்சி. இன்னும் 6 மாதத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. குல கல்வி திட்டத்தை தி.க. கடுமையாக எதிர்க்கிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நேரு

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எடுத்த காரியத்தை முடிப்பவர். பெரியார் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை. இன்று பலரும் தங்களின் படிப்பை பெருமையாக கூறி கொள்கிறார்கள். அவர்கள் படிக்க காரணம் பெரியார். இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர் பெரியார். பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று, அவர் வழியில் ஆட்சி நடத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவர்கள் 3 பேரின் கொள்கைகளை ஏற்று இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து வருகிறார் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மதியழகன் எம்.எல்.ஏ. (கிழக்கு), ஒய்.பிரகாஷ் (மேற்கு), திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் அன்புராஜ், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.எஸ்.பிரபாவதி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.பி. சுகவனம், நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ்.சீனிவாசன், மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் ஜி.கே.உதயகுமார், மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்