குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு கலெக்டர் அலுவலகம் முன்புகிராம மக்கள் போராட்டம்

Update: 2023-07-03 19:30 GMT

தர்மபுரி:

வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க இடையூறு செய்யக் கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏ.கோடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்ப்பதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை பல ஆண்டுகளாக மேய்ப்பது வழக்கம். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த எங்களுக்கு இது முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த நிலையில் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதேபோல் வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றவர்கள், சுண்டைக்காய் பறிக்க சென்றவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களை பாதுகாக்க வனப்பகுதியில் தொடர்ந்து ஆடு, மாடுகள் மேய்க்க இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்