சம்பளம் வழங்கப்படாததை கண்டித்துசங்கராபுரத்தில், சுகாதார பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து சங்கராபுரத்தில் சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-10 18:45 GMT

காரைக்குடி

கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து சங்கராபுரத்தில் சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

3 மாத காலமாக

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் சுகாதாரப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் 45 பேரும், ஊராட்சியின் தூய்மை காவலர்களாக 35 பேரும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களாக 24 பேரும், தெருவிளக்கு பராமரிக்கும் பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 4 பேரும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்களாக 2 பேர், ஊராட்சி மன்ற செயலாளர் ஒருவர் உள்ளிட்ட 119 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்த பணியாளர்கள் 45 பேரும் சம்பளம் வழங்காததை கண்டித்து திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தின் முன் திரண்டனர். அவர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி, சாக்கோட்டை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி, ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் விரைவில் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பிறகும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி வீடுகளுக்கு சென்று விட்டனர்.

நடவடிக்கை வேண்டும்

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி கூறுகையில், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் ஊராட்சி மன்ற சுகாதார பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான சம்பளம் கொடுப்பதற்கு நாம் தடையாக இருந்து விடக்கூடாது. துணைத்தலைவர் கையெழுத்திட்டால் அனைவருக்கும் உடனே சம்பளம் வழங்கப்பட்டு விடும், இதில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலைமைகளை உணர்ந்து அவர்களுக்கான சம்பளத்தினை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார். இப்பிரச்சினை குறித்து துணைத்தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், தலைவர் பதவி குறித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது அதற்கான தீர்ப்பு வரவேண்டும்..அதன் பிறகே நாங்கள் மன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும். தொழிலாளர்களுக்கு சம்பளம் போடுவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. தனி அலுவலர் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். இருதரப்பினர் மோதல் போக்கால் அப்பாவி தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்