உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-07-03 19:00 GMT


உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் நேற்று தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களாட்சியின் உயிர்நாடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று இங்கு வந்துள்ள உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் இந்த பொறுப்புக்கு வந்து இருக்கிறீர்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. இந்த வெற்றிக்கு பின்னால் உங்கள் உழைப்பு, தியாகம், போராட்டம், திறமை இருக்கிறது. இங்கே அதிகம் பெண்கள் வந்து உள்ளீர்கள். ஆண்களை விட பெண்கள் இந்த பொறுப்புக்கு வருவதற்கு எத்தகைய சிரமம் அடைந்து இருப்பீர்கள் என்பதை நான் அறியாதவன் அல்ல.

எத்தகைய அவமானம், எத்தகைய வீண் பழி, தடைகளை நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் என்பதை அறிவேன். அதே பொறுப்புணர்வுடன் இந்த பொறுப்பை கவனிக்க வேண்டும். நீங்கள் அமர்ந்து இருக்கும் பொறுப்பு சாதாரண பொறுப்பு இல்லை. அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற பொறுப்பா இது என நீங்கள் நினைக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி.

மக்கள் பணியின் முதல்பணி

பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும், ராஜாஜி சேலம் நகராட்சி தலைவராகவும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கினர். பெருந்தலைவர் காமராஜர் விருதுநகர் நகராட்சி தலைவராக அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா, சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர்.

தற்போது முதல்-அமைச்சராக வந்துள்ள நான் சென்னை மேயராக இருந்து உள்ளேன். அமைச்சர் நேரு லால்குடி நகராட்சி தலைவராக இருந்து உள்ளார். மக்கள் பணியின் முதல்பணி உள்ளாட்சி அமைப்புகள் தான். மக்களுக்கு தொண்டாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கான பயிற்சி பாசறைதான் இந்த மாநாடு.

முதலில் கிடைத்தது சிறைச்சாலை

நான் எத்தனையோ மாநாட்டில் இதுவரை பேசி உள்ளேன். ஆனால் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பேசும் முதல் மாநாடு இதுதான். சிறு வயதிலேயே ஆழமான அரசியல் கருத்துகளை உள்வாங்கி, கலைஞர் வழியில் என்னை இந்த இயக்கத்துக்கு ஒப்படைத்து விட்டேன். பள்ளி, கல்லூரி படிப்பை விட, அரசியல் படிப்புதான் எனக்கு பிடிக்கும். பதவிக்கு வர வேண்டும் என்பதற்கு அல்ல. பெரியார், அண்ணா, கருணாநிதி போன்று மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதற்காகதான்.

ஆனால் எனக்கு முதலில் கிடைத்தது பதவி, மலர் மாலை இல்லை. சிறைசாலை தான் கிடைத்தது. துன்பம், துயரம் வரவேற்றது. திருமணமான 5 மாதத்தில் மிசா சட்டத்தில் கைதாகி ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது அரசியல் வேண்டாம், கட்சி வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு போக கூறினர். ஆனால் நான் தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்றேன். மற்றவர்களையும் தி.மு.க.வை விட்டு விலக வேண்டாம் என்று கூறியதுடன், அதனை எழுதி கொடுக்கவும் கூடாது என வலியுறுத்தினேன்.

காத்திருக்க வேண்டும்

ஓராண்டு சிறையில் இருந்த நான் சட்டமன்றத்தில் நுழைய 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. பொறுப்புகள் உடனடியாக கிடைக்காது. கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டும். தி.மு.க.வில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு மட்டுமே பொறுப்பு கிடைக்கும்.

வாழ்க்கையில் பொறுப்பு கிடைக்காமல் கழகத்திற்கு உழைத்து மாண்டவர்களும் சிலர் உண்டு. பொறுப்பை போற்றி பாதுகாக்கும் கடமை உங்கள் கையில் உள்ளது. பதவிக்கு வருவது முக்கியமல்ல. அதை தக்க வைப்பதுதான் மிக, மிக முக்கியம்.

கடும் நடவடிக்கை

மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து, நீங்கள் உதவினால், அவர்கள் நிச்சயம் உங்களை நோக்கி வருவார்கள். அதே நேரத்தில் நீங்கள் தவறு செய்து விட்டால் உங்களை விட்டு மக்கள் விலகுவார்கள். அதுமட்டுமல்ல. முக்கியமாக உங்களை புறக்கணிப்பார்கள். மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம்.

புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள பெண்களுக்கு பயமோ, கூச்சமோ, தயக்கமோ இருக்க கூடாது. தரப்பட்ட பொறுப்பை நீங்களே நேரடியாக கையாளுங்கள். கணவரிடத்தில் ஒப்படைத்து விடாதீர்கள். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் எளிமை கொண்டவர்களாக தன்னிச்சையாக செயல்படுங்கள். சட்டப்படி, நியாயப்படி மற்றும் விதிமுறைப்படி மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.

சர்வாதிகாரியாக மாறுவேன்

மேலும் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். அனைவரின் கருத்தையும் கேட்டு, அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து செயல்படுவது தான் ஜனநாயகம். யாரும், எதையும் செய்யலாம் என்பது ஜனநாயகம் அல்ல. ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, இங்கு உள்ள அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஆட்சிக்கு சும்மா வந்து விடவில்லை. தங்க தாம்பளத்தில் வைத்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவி எனக்கு கிடைத்துவிடவில்லை. 50 ஆண்டுகாலம் உழைத்த உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான தி.மு.க. தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பின் பலன் இது. என்னை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த கட்சியை என்னிடம் ஒப்படைத்து உள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் என்னை நம்பி ஆட்சியை என்னிடம் ஒப்படைத்து உள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்காலம் தி.மு.க. கையில் தான் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவற்றிற்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்து விடக்கூடாது.

ஒற்றுமை தேவை

யாரோ ஒரு சிலரின் தவறான செயலின் காரணமாக முதல்-அமைச்சரான நானோ?, கோடிக்கணக்கான தொண்டர்களோ? அவமானத்தால் தலைகுனியக்கூடிய நிலையை யாரும் உருவாக்கி விடக்கூடாது என்பதை உங்களின் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் மூச்சாக கடைபிடியுங்கள். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலில் தேவை ஒற்றுமை அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான், மக்களுக்கு நன்மை செய்ய முடியும். இல்லை என்றால் அனைத்து பணிகளும் முடங்கிவிடும். மேயர், துணை மேயர் பேச மாட்டார்கள். நகராட்சி தலைவர், கவுன்சிலருக்கு ஆகாது. பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு உள்ளேயே பஞ்சாயத்து இதுபோன்ற செய்திகள் என் காதுகளுக்கு வருகிறது. அதற்கு நீங்கள் இடம் கொடுக்க கூடாது.

திராவிட மாடல் அரசு

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒற்றுமையுடன் ஊருக்காக உழைக்க வேண்டும். சமூகநீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, பெண் உரிமை, இனபற்று, பகுத்தறிவு போன்ற அடிப்படை கருத்துகள் கொண்டதுதான் திராவிட இயக்கம். அதை உள்வாங்கி செயல்படக் கூடியதுதான் இந்த திராவிட மாடல் அரசு.

தி.மு.க. அரசின் கோட்பாடுகளை அனைவரும் முழுமையாக தெரிந்தும், அறிந்தும், புரிந்தும் வைத்திருக்க வேண்டும். காலையில் பல்வேறு கருத்துரைகள் இங்கு வழங்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்களுக்கு இது தேவையா? என நீங்கள் கருத மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் இந்த பொறுப்புக்கு வந்து இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் அல்ல. தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் அனைவரும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதை செயல்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். சாலை போடுவது, பாலம் கட்டுவது, தண்ணீர் தொட்டி கட்டுவது, கழிவுநீர் கால்வாய் அமைப்பது மட்டும் உங்கள் பணி அல்ல. சமத்துவ பாதை அமைப்பது, சகோதர பாதை அமைப்பதும் உங்கள் கடமைதான். சமூகத்தில் கழிவுகளை துடைக்க வேண்டியதும் உங்கள் கடமைதான். அதனால்தான் இதை திராவிட மாடல் ஆட்சி என்கிறோம்.

நீங்கள் இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்கிற வரிசையில் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி என்றுநான் சொல்லி வருவது இதைதான். அனைத்து சமூகங்களின் வளர்ச்சியை பெறாமல், அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்கிவிட முடியாது. சமூக நீதி உறுதிமொழி, சமத்துவநாள் உறுதிமொழி எடுத்து கொள்ள தகுதியை பெற்றாக நாம் இருக்க வேண்டும். இந்த தகுதியை கொண்டவர்கள் தான் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். எது திராவிட மாடல் என கேட்பவர்களுக்கு இதுதான் எனது பதில்.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தலை நிமிர்ந்த தமிழகம், உன்னதமான தமிழகம் மற்றும் அனைத்திலும் மேம்பட்ட தமிழகத்தை உருவாக்க என்னை ஒப்படைத்து கொண்டு உள்ளேன். நீங்களும் உங்களை ஒப்படைத்து கொள்ளுங்கள். நாம் நிறைவேற்றி கொடுத்துள்ள திட்டங்களால் பயனடைந்த மக்களுக்கு நீங்கள் அதை நினைவூட்ட வேண்டும். வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும், திண்ணை பிரசாரம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் மூலமும் மக்களுக்கு சாதனைகளை எடுத்து சொல்லுங்கள்.

இவ்வாறு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்